எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு தயக்கம் ஏன்?

பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்தப்படும் எரிபொருளால் மோட்டார் வாகனங்களின் என்ஜின் பாதிக்கப்படுவதாக பேசப்படுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு தயக்கம் ஏன்?
Published on

நமது கச்சா எண்ணெய் தேவையில் 88.5 சதவீதம் அதாவது கடந்த 2025-26-ல் மட்டும் ரூ.16.53 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெயில் இருந்து பிரிக்கப்படும் பெட்ரோல்-டீசலுக்கு மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்தவகையில் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவை குறைக்க எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. எத்தனாலை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இல்லை. நம்நாட்டிலேயே விளையும் கரும்பு, சோளம், அரிசி, உணவு தானியங்கள் மற்றும் வேளாண் கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால் ஒருபக்கம் பெட்ரோல் பயன்பாடு குறையும் என்றாலும், மறுபக்கம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தும் முறை 2013-14-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அப்போது பெட்ரோலுடன் 1.5 சதவீத எத்தனால் கலந்து பயன்படுத்தப்பட்டது. 2019-20 மற்றும் 2021-22-க்கு இடைப்பட்ட காலங்களில் 5 முதல் 10 சதவீதமும், இப்போது 20 சதவீதமும் எத்தனாலை கலந்து பயன்படுத்தும் முறை வந்துள்ளது. 20 சதவீத எத்தனாலை பயன்படுத்துவதால் ரூ.1.90 லட்சம் கோடி அந்நிய செலாவணி மிச்சமாகும். அந்த அளவுக்கு கச்சா எண்ணெய் வாங்குவது குறையும். விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த 'ஈ20' என்று அழைக்கப்படும் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்தப்படும் எரிபொருளால் மோட்டார் வாகனங்களின் என்ஜின் பாதிக்கப்படுவதாக பேசப்படுகிறது. ஆனால் 2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களில்தான் இந்த குறைபாடு இருந்தது.

2023-க்கு பிறகு தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் எல்லாமே 'ஈ20' பெட்ரோலுக்கு இணக்கமான என்ஜின்களோடுதான் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் கரைப்பானுக்குரிய தன்மையை எத்தனால் கொண்டிருப்பதால் பழைய வாகனங்களில் இந்த 'ஈ20' பெட்ரோலை பயன்படுத்தும்போது ‘மைலேஜ்' குறைகிறது என்றும், பெட்ரோல் 'டேங்க்' மற்றும் ரப்பர் குழாய்களை மெல்ல மெல்ல அரித்துவிடும் என்றும் சொல்லப்படுவதால், பழைய வாகனங்களில் இந்த 'ஈ20' பெட்ரோலை பயன்படுத்த தயக்கம் இருக்கிறது. புதிய வாகனங்களில் என்ஜின்களில் பாதிப்பு இல்லையென்றாலும், அதிலும் மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து 'தினத்தந்தி' சார்பில் வாகன ஓட்டிகளிடம் நேரடியாக களத்தில் கருத்துகள் கேட்கப்பட்டன. அதிலும் அவர்கள், மைலேஜ் குறைவது உண்மைதான் என்றும், பெட்ரோல் 'டேங்க்' உள்பட சில உதிரிபாகங்கள் 'டேமேஜ்' ஆகும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறினார்கள்.

20 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்துவது போன்று, பெட்ரோலுடன் 50 சதவீதம், 85 சதவீதம் என்று எத்தனாலை கலந்து பயன்படுத்தும் திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது. எத்தனால் கலப்பு என்பது நாட்டின் பொருளாதாரத்துக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் ஒரு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், வாகன ஓட்டிகளின் ‘மைலேஜ்' மற்றும் உதிரிபாக சேதம் குறித்த அச்சத்தை போக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உண்டு. புதிய வாகனங்களின் என்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு. பழைய வாகனங்களுக்கும் ஏற்றவாறு எரிபொருளை முறைப்படுத்துவது அவசியம். சவால்களை களைந்து, குறைபாடுகளை நீக்கினால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக கரையும் நம் நாட்டு 'கஜானா' காக்கப்படுவதுடன், இந்தியாவின் பசுமை எரிபொருள் கனவும் நனவாவது நிச்சயம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com