

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தனிப்பெரும் கட்சியாக இருந்து தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் 'அப்பாடா...' என்று அமர்ந்திருக்கும் த.வெ.க.வுக்கு, அடுத்த ஒரு தேர்தலை சந்திக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது 10 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 24 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதால் அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18-ந்தேதி நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய்சிங் உள்பட பல பிரபலங்களின் பதவிக்காலமும் முடிவதால், அவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேவேகவுடாவுக்கு 93 வயதாவதால் இனி மாநிலங்களவைக்கு மீண்டும் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.
மொத்தம் உள்ள 24 இடங்களில், ஆந்திரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடக்கிறது. இதுதவிர தமிழ்நாட்டில் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில், சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றிருப்பதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதுபோல மராட்டியத்தில் துணை முதல்-மந்திரியாக இருந்த அஜித்பவார் விமான விபத்தில் இறந்துவிட்டதால், அவருடைய மனைவி சுனேத்ரா பவார் அங்கு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று துணை முதல்-மந்திரி ஆகிவிட்டார். இதனால், அவர் ஏற்கனவே வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த 2 இடங்களுக்கான இடைத்தேர்தலையும் சேர்த்தே ஜூன் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த 26 இடங்களில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 18 இடங்கள் இருக்கின்றன.
அந்த 18 இடங்களும் மீண்டும் அவர்களுக்கே இந்த தேர்தலில் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் இருக்கும்நிலையில், இந்த தேர்தலில் 5 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஒரு இடம் இருக்கும் நிலையில், 2 இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் இருந்த நிலையில், இந்த தேர்தலில் கணக்கு பூஜ்ஜியமாகிவிட்டது.
சட்டசபையில் புதுக்கணக்கை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் மாநிலங்களவையிலும் கால்தடம் பதிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக சட்டசபையில் 233 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், மாநிலங்களவைக்கு ஒரு இடத்துக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஒரு கட்சி வெற்றிபெறவேண்டும் என்றால், 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கவேண்டும்.
அந்த வகையில், த.வெ.க. கூட்டணிக்கு முழு 'மெஜாரிட்டி' இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு அந்த அளவு பலம் இல்லாததால், அவர்கள் போட்டிக் களத்தில் நிற்கமுடியாது. எனவே மாநிலங்களவையிலும் த.வெ.க. கால்தடம் பதிக்குமா? இல்லையென்றால் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிடுமா? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஜூன் 1-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் நிலையில், அதற்கு முன்பே இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.