டிரம்பின் பேச்சு உறவை மணம் வீசச் செய்யுமா..?

டிரம்பின் வரி விதிப்பு போன்ற செயல்களால் பகைவர்களாக இருந்த இந்தியாவும், சீனாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டது.
டிரம்பின் பேச்சு உறவை மணம் வீசச் செய்யுமா..?
Published on

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், அதன் பின் இந்தியா, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது என்று கூறி அபராத வரி 25 சதவீதம் என்று சொல்லி மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். இதனால் பிரதமர் மோடிக்கும், டிரம்புக்கும் இடையே இருந்த நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

கடைசியாக மோடியும், டிரம்பும் ஜூன் 17-ந்தேதி 35 நிமிடம் டெலிபோனில் பேசினர். அதற்கு பிறகு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இந்த நிலையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கையை பிடித்து நெருங்கிய நட்பின் அடையாளமாக சிரித்து கொண்டே பேசிய படம் சமூகவலைதளங்களில் வெளியானது.

டிரம்பின் வரி விதிப்பு போன்ற செயல்களால் தான் பகைவர்களாக இருந்த இந்தியாவையும், சீனாவையும் நெருங்கிய நண்பர்களாக ஆக்கிவிட்டது என்று அமெரிக்காவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து டிரம்பின் பேச்சில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

வழக்கமாக, வீரதீரமாக பேசும் டிரம்பின் குரலில் கடந்த திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் சுணக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமையன்று, இந்தியா இப்போது அமெரிக்கா பொருட்களுக்கு அவர்கள் நாட்டில் விதிக்கும் வரியை பூஜ்ஜியம் என்ற அளவில் குறைப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆனால் இது தாமதமான நடவடிக்கை. இதனை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று, நாங்கள் இந்தியாவோடு நல்ல உறவோடு இருக்கிறோம். ஆனால் பல ஆண்டுகளாக இது ஒருவழிபாதையான உறவாக இருந்தது என்றார். புதன்கிழமையன்று, இந்தியாவிற்கு போடப்பட்ட 50 சதவீத வரி, அவர்கள் ரஷியாவிற்கு கொடுக்கும் கோடிக்கணக்கான டாலர் மீது போடப்பட்ட வரியாகும். நான் இன்னும், 2-வது வரியோ, 3-வது வரியோ இந்தியா மீது விதிக்கப்போவது இல்லை என்று இறங்கி பேசினார்.

வெள்ளிக்கிழமை அவர் தனது டிரூட் சமூக வலைதளத்தில், சீனா-ரஷிய அதிபர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கிக்கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு, இந்தியாவையும், ரஷியாவையும் ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம், அமெரிக்கா இழந்துவிட்டது போல் தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்ட வளமான எதிர்காலத்தை பெற்று கொள்ளட்டும் என்று மிகவும் வித்தியாசமான மனப்பாங்குடன் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, இந்தியாவும், அமெரிக்காவும் சிறப்பான நட்புறவை கொண்டிருக்கின்றன. எனவே கூடுதல் வரி விதிப்பு காரணமாக இருநாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து கவலைகொள்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு பிரதமர் மோடியுடன், எப்போதும் நட்புறவு உண்டு. அவர் மிக சிறந்த பிரதமர். மிக சிறந்த மனிதர். எதை பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை என்று இதுவரை கூறிய கசப்பான வார்த்தைகளுக்கு மாற்றாக மிகவும் இனிமையான செய்தியை பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இருநாடுகள் இடையே உள்ள உறவுகள் குறித்து டிரம்பின் உணர்வுகளையும், ஆக்கப்பூர்வமான மதிப்பீடுகளையும் வெகுவாக பாராட்டுகிறேன் என்று பதிலளித்தார். ஆக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், என்னதான் பேசினாலும் கடைசியாக சனிக்கிழமை பதிவிட்ட செய்தி நட்புறவை மேலும் மணம் வீசச் செய்யுமா? தேவையற்ற வரியை எல்லாம் டிரம்ப் ரத்து செய்வாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com