அஸ்திவார அமைப்பில் மூன்று நிலைகள்

கட்டுமான அமைப்புகளுக்கான கடைக்கால் என்ற அஸ்திவார அமைப்பு என்பது அவற்றிற்கு முதலும் முக்கியமானதுமான பணியாகும்.
Published on

ஏனெனில் ஒட்டுமொத்தமாக கட்டமைப்பின் எடை அஸ்திவாரம் மூலம் பூமிக்கு செலுத்தப்படுகிறது. பாரம் தாங்கும் அஸ்திவார முறைகள் டீப் பவுண்டேஷன் மற்றும் ஷாலோ பவுண்டேஷன் என்ற இரு வகைகளில் உள்ளன.

மண்ணின் தன்மைகள்

மண்ணின் தன்மை மற்றும் தனிப்பட்ட வீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஷாலோ வகை அஸ்திவாரம் 3 முதல் 6 அடிகள் வரை ஆழம் கொண்டதாக இருக்கலாம். பல அடுக்கு மாடிகள் உள்ளிட்ட உயரமான கட்டுமானங்களுக்கான டீப் பவுண்டேஷன் கிட்டத்தட்ட 60 அடி முதல் 200 அடி வரையிலும் கூட அமைக்கப்படலாம்.

ஷாலோ வகை கடைக்கால் அமைப்பில் இயற்கையான நில மட்டத்திற்கு கீழே நீளம், அகலம், ஆழம் அல்லது உயரம் என மூன்று அளவுகளைக்கொண்டு குழி எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பகுதி, கட்டிடம், மண்ணின் தன்மை, மனையின் நிலத்தடி நீர் மட்டம், கட்டிடத்தின் மொத்த சுமை ஆகியவற்றை பொறுத்து கடைக்கால் குழியின் நீளம், அகலம், ஆழம் ஆகியவை வெவ்வேறாக அமையலாம்.

பொதுவான மூன்று நிலைகள்

முதல் நிலையில் குழிகள் அனைத்தும் தரையடியில் சம அளவு மட்டம் கொண்டதாக அமைய வேண்டும். அதன் பின்னர் தகுந்த மணல் நிரப்பும் பணியை வேண்டிய உயரத்தில் ஒரே மட்டத்தில் அனைத்து குழிகளுக்கும் செய்து, நன்றாக அழுத்தப்பட வேண்டும்.

அடுத்த நிலையில், மணல் அழுத்தப்பட்ட பிறகு பி.சி.சி ( Plain Cement Concrete) என்ற கருங்கல் ஜல்லி, மணல், சிமெண்டு ஆகியவை கலக்கப்பட்ட கலவை இடப்படும். வேண்டிய விகிதத்தில் குழிகளுக்குள் சம மட்டத்தில் அமையும் விதத்தில் கலவை இடப்பட்டவுடன் அதற்கு மேலாக அஸ்திவார தூணுக்கான கீழ்ப்பகுதியை அமைத்து விடாமல், பி.சி.சி கலவைக்கு ஒரு நாளாவது நீராற்றல் செய்வது அவசியம்.

மூன்றாம் நிலையில் பூட்டிங் ( Footing) என்ற கம்பி கட்டும் முறை அல்லது அடித்தள அமைப்பு முறை மேற்கொள்ளப்படும். அஸ்திவார பில்லர் என்ற தூணிண் பாதப்பகுதி இதுவாகும். அதில் படல் (Mat) மற்றும் தூண் (Column ) என்னும் இரண்டு பகுதிகள் இருக்கும். மேட் என்பது பில்லரின் அடிப்பகுதியாகும். அதில் வெவ்வேறு கன அளவு கொண்ட இருவகை கம்பிகள் சம இடைவெளியில் குறுக்கும், நெடுக்குமாக கவர் பிளாக் வைத்து கட்டப்படும்.

இதில் உள்ள கம்பிகளின் முனைகள் அனைத்தும் மேல் நோக்கி வளைத்து விடப்பட்டிருக்க வேண்டும். அதன் மீதுதான் பில்லருக்கான டி.எம்.டி கம்பிகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு, மேட் பகுதியிலிருந்து கான்கிரீட் இடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com