பங்குனி உத்திர விழா நிறைவு: பாலிகை விடுதல் நிகழ்ச்சி - சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர்

தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பங்குனி உத்திர விழா நிறைவு: பாலிகை விடுதல் நிகழ்ச்சி - சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர்
Published on

திருவண்ணாமலை,

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலில் கடந்த 11-ந் தேதி பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அன்று இரவு கோவில் கொடிமரம் முன்பு அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கடந்த 13-ந் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நலங்கு உற்சவம், திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

அதைதொடர்ந்து நேற்று விழா நிறைவாக மதியம் சுமார் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உலாவாக தாமரை குளத்திற்கு வந்தனர்.

பின்னர் திருக்கல்யாணத்தின்போது வைக்கப்பட்ட முளைத்த நவதானியங்களை குளக்கரையில் புனித நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர். தொடர்ந்து தாமரை குளம் ராஜா மண்டபத்தில் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மாலையில் அங்கிருந்து கோவிலுக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் குமரக்கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com