

தஞ்சாவூர்,
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய, கலாசார மற்றும் வீர விளையாட்டாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டு களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி தஞ்சை பெரியகோவில் அருகே இருந்து ரெயில் நிலையம் வரை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ஜீவக்குமார், நல்லதுரை, ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி பழனியப்பன், விவசாய சங்க தலைவர் சிவா, இந்து இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் பழ.சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை நகர தலைவர் வாசுதேவன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முகில், முகேஸ்வரன், பிரகாஷ், அஜய், சிந்தனை, அகல்யா, தினேஷ், விஷ்ணு மற்றும் இளைஞர்கள், அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் காளைமாட்டுடன் வந்திருந்தார்.
திடீரென ஊர்வலம்
பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாணவர்கள், இளைஞர்கள் கலைந்து சென்றனர். அப்போது அதில் ஒருபிரிவினர் திடீரென தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலமாக செல்லக்கூடாது என தெரிவித்தனர். ஆனால் போலீசாரின் அனுமதியை மீறி மாணவர்கள், இளைஞர்கள் நாங்கள் அண்ணாசிலை வரை ஊர்வலமாக செல்கிறோம் என கூறி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.