குளிர்காலத்தில் ராகி சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?
ராகி நம்முடைய பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்று. சங்க காலம் முதலே ராகி தமிழர்களின் உணவாக இருந்திருக்கிறது. இன்றைக்கு நாகரீகம் என்கிற பெயரில் அதை மறந்துவிட்டோம்.
நம்முடைய முன்னோர்கள் வயதான காலத்திலும் உடலை உறுதியாக வைத்திருந்ததற்கு காரணம் ராகியைப் போன்ற சிறுதானிய உணவுகளை அடிப்படையான உணவாக எடுத்துக் கொண்டது தான்.
ராகியில் இரும்புச்சத்து மிக அதிகம். இது குளிர்காலத்தில் ஏற்படும் அனீமியா மற்றும் உடல் சோர்வைப் போக்கும் ஆற்றல் கொண்டது.
ராகியில் அதிகப்படியான கால்சியம் மற்றும் மக்சீனியம் ஆகியவை நிறைந்துள்ளது. இது உடலில் கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை வலுவாக்குகிறது.
ராகியில் வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் ராகியை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ளும்போது நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, பருவ கால நோய்களை விரட்டும்.
கேழ்வரகில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதை உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்குத் தேவையான ஆற்றலை கிடைக்கிறது.
ராகியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தி, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.
குளிர்காலத்தில் சர்க்கரை சேர்த்த இனிப்பு உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். அந்த சுகர் கிரேவிங்கைக் கட்டுப்படுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ராகி உதவி செய்கிறது.
ராகியில் நிறைய அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவை உணவாக எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்கும்.