மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்.!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.
மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர்.
இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
நேற்று இரவு மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
Explore