புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் நேற்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
Published on

புதுச்சேரி

புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மாமூல் தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற 3 நாட்களுக்கு பிறகு முதலியார்பேட்டை ரவுடி சின்ன செல்வம் கோவில் தகராறு காரணமாக பட்டபகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் பாலத்தில் பயங்கர ஆயுதங்களோடு பதுங்கியிருந்த உடையார்தோப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சின்ன செல்வம் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இவர்கள் அங்கு பதுங்கியிருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் சோதனை

புதுவையில் சமீப காலமாக ரவுடிகளுக்கு இடையே யார் பெரியவர் என்ற போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, அதனால் புதுவையில் உள்ள ரவுடிகளை ஒடுக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் உத்தரவின்பேரில் போலீசார் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகளை கைது செய்ய தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் தாவீதுபேட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். தாவீதுபேட் பகுதியின் முக்கிய குற்றவாளிகளான குள்ளசதீஷ், திலிப், குள்ளமகேஷ், சதீஷ் ஆகியோரது வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். தலைமறைவாக உள்ள அவர்களது வீடுகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை என கூறப்படுகிறது,

ரவுடிகள் தலைமறைவு

இதனிடையே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் குமரகுருபள்ளத்தை சேர்ந்த அச்சுதன் என்ற தொட்டி ஜெயா, டி.வி. நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (23) ராசு உடையார்தோப்பை சேர்ந்த ஆனந்த் என்ற பாம்புஆனந்த் (29) திருபுவனை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகியோரை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை களின் காரணமாக புதுவையில் உள்ள ரவுடிகள் பலர் புதுவையை விட்டு வெளியேறி தலைமறைவாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com