பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, பனை ஓலை, மஞ்சள் குலை விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் கரும்பு, பனை ஓலை, மஞ்சள்குலை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, பனை ஓலை, மஞ்சள் குலை விற்பனை மும்முரம்
Published on

நெல்லை,

பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் கரும்பு, பனை ஓலை, மஞ்சள்குலை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை வருகிற 14ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் பொங்கல் பொருட்களை விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.

தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கரும்புகள் லாரி மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதியில் பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. பொங்கல்படி கொடுக்க ஆட்டோ, கார் மூலம் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட், நெல்லை டவுன் மார்க்கெட் பகுதிகளிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை ஓலைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சீவலப்பேரி, அதைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.10 முதல் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் பொங்கல் வைப்பதற்கான அடுப்புகள், அடுப்பு கட்டிகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.

பனங்கிழங்கு விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.60க்கும், 50 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.10 முதல் ரூ.20வரை விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. வழக்கத்தை விட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com