

இதையொட்டி போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குடியரசு தினவிழா
குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு குடியரசு தினவிழா நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் சம்பத் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர், அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வதுடன் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியும், சேலம் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதையொட்டி, விழா நடைபெறும் காந்தி மைதானம் நேற்று மாலையிலேயே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மைதானத்தின் நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்து முன்னெச்சரிக்கைக்காக வெடிபொருட்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று மைதானத்தை முழுவதும் சுற்றி வந்து சோதனை நடத்தினர்.
இதுதவிர, மாநகரில் இரவில் ஆங்காங்கே போலீசார் நின்றுக் கொண்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதுடன், அவர்களுடைய முழுமுகவரியை பெற்றுக் கொண்டனர். மேலும், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சேலம் பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்டத்திலும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட முழுவதிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.