விழுப்புரத்தில் அரசு விதிமுறைகளை மீறும் மக்களால் கொரோனா பரவும் அபாயம்

விழுப்புரத்தில் அரசு விதிமுறைகளை மீறும் மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் அரசு விதிமுறைகளை மீறும் மக்களால் கொரோனா பரவும் அபாயம்
Published on

விழுப்புரம்,

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் கடைகளுக்கு மட்டும் தளர்வு அளிக்கப்பட்டு அந்த கடைகள் பகல் 12 மணி வரை இயங்கின. இருப்பினும் கொரோனா தொற்று குறையாததால் கடந்த 15-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி, மீன் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அன்று முதல் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை மட்டும் இயங்கி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா நோயால் மொத்தம் 26,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 12 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகவும் பீதியில் உள்ளனர்.

விதிமீறும் மக்கள்

இது ஒருபுறம் இருக்க அத்தியாவசிய பொருட்களை வாங்க விழுப்புரம் நகரில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவர்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் கடைவீதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள மார்க்கெட் பகுதிகள் மற்றும் நேருஜி சாலையில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறி அத்தியாவசிய பொருட்களை வாங்க திருவிழா கூட்டம்போல் மக்கள் கூட்டம் கூடுகிறது. இவர்கள் கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயின் தாக்கத்தை மறந்தும், சிறிதும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். இவர்கள் அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு பொருட்களை வாங்குவதால் இதுவே கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா தொற்று பரவும் அபாயம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படக்கூடாது என்பதை உணர்ந்தும் ஊரடங்கில் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகளுக்கு மட்டும் தளர்வு அளித்து அந்த கடைகள் காலை 10 மணி வரை இயங்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனால் ஊரடங்கு தளர்வில் அரசின் விதிகளை மக்கள் கடைபிடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கச்செல்கிறோம் என்ற பெயரில் அந்த விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனால் விழுப்புரம் நகரில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால்தான் கொரோனா பெருந்தொற்றின் சங்கிலி தொடரை உடைத்தெறிய முடியும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படாமல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிபாத்துள்ளனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com