

அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மணிக்கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் ஓம். சிவசக்திவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு 66 பயனாளிகளுக்கு ரூ.7,46,94,319 மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா, மாதாந்திர உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, இருளர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தடுப்பூசி
அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்களின் நலன் கருதி கொரோனா பெருந்தொற்றினால் இறந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த 357 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு இக்கருணை தொகை வழங்கப்படும். மேலும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.