வலுவான தலைமை வேண்டும் என்பதற்காக சசிகலாவை ஏற்றுள்ளோம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

வலுவான தலைமை வேண்டும் என்பதற்காக சசிகலாவை ஏற்றுள்ளோம் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
வலுவான தலைமை வேண்டும் என்பதற்காக சசிகலாவை ஏற்றுள்ளோம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
Published on

செயல்வீரர்கள் கூட்டம்

பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், துணை சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் வரிசையில் தலைமுறை தலைவராக ஜெயலலிதா திகழ்ந்து வருகிறார். 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு, ஜானகி, ஜெயலலிதா அணி என்று பிரிந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. அன்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இன்று சசிகலாவிற்கும் அதே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வை உடைக்க தி.மு.க.வினர் முயற்சி செய்து வருகின்றனர்.

வலுவான தலைமை

அன்று ஒற்றுமையாக இருந்ததால் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க.வினர் மீது மக்கள் வெறுப்பு என்று தி.மு.க.வினரால் செயற்கையாக பரப்பப்பட்டு வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். டி.டி.வி. தினகரன் ஏற்கனவே எம்.பி. மற்றும் அ.தி.மு.க. பொருளாளராக இருந்தவர்தான். அவரிடம் இருந்த பொருளாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் வழங்கப்பட்டது. நிர்வாகிகளை மாற்றுவது சகஜம். அதற்காக இரட்டை இலை சின்னத்தை முடக்கப்பாடுபடுவது நியாயமா?. சசிகலாதான் பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக ஆக்கினார்.

அவரை இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய செய்தவர் சசிகலா தான். அதற்கு டி.டி.வி. தினகரன் பங்கு அதிகம். சசிகலாவை முதல்-அமைச்சராக தேர்வு செய்ய பன்னீர்செல்வம் தான் முன்மொழிந்தார். அவர் அணியில் உள்ளவர்கள் சசிகலாவால் உருவாக்கப்பட்டவர்கள். வலுவான தலைமை அமைய வேண்டும் என்பதற்காக சசிகலாவின் தலைமையை ஏற்றுள்ளோம். ஆட்சி போனால் மீட்க முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் மனு கொடுத்தனர்

தி.மு.க.வினர் எனக்கு சேலை, வளையல் வழங்க வரும் போராட்டம் நடத்தினார்கள். சென்னைக்கு சட்டசபை அலுவலக வேலை காரணமாக சென்றதால், பொள்ளாச்சிக்கு வர முடியவில்லை. பொள்ளாச்சியில் இருந்திருந்தால் ஒரு சேலைக்கு 1000 சேலை பெற்றிருப்பேன். அதை பெற்றுக்கொண்டு மக்களுக்கு கொடுத்திருப்பேன். இந்த சலசலப்பிற்கு அஞ்ச மாட்டேன். தி.மு.க.வின் சூதுக்கு அடிமையாகி விடாதீர்கள். 24-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா வருகிறது. அவரின் பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், சூடாமணி கூட்டுறவு சங்க துணை தலைவர் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மணிபாரதி, அ.தி.மு.க. பிரமுகர்கள் அருணாசலம், அருளானந்தம் மற்றும் பலர் கலந்துகொண் டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com