

பொன்னமராவதி,
மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் கடந்த 12-ந்தேதி மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்து அந்த பகுதி பொதுமக்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது, தேங்காய் நார்களை பரப்புவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் அங்கு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
சாலை மறியல்
இதையடுத்து மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வேந்தன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் வேந்தன்பட்டியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், இலுப்பூர் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. முன்கூட்டியே அனுமதி அளிக்க முடியாது என்று கூறியிருந்தால் நாங்கள் ஏற்பாடு செய்து இருக்க மாட்டோம். தற்போது பெரும் செலவு செய்வு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, காளைகளை கொண்டு வருவதற்கு பாக்கு வைத்து அழைப்பு விடுத்த பிறகு மஞ்சுவிரட்டு நடத்தக் கூடாது என்று கூறினால் நாங்கள் என்ன செய்வது? எனவே மஞ்சுவிரட்டு நடக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர். இதையடுத்து மஞ்சுவிரட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடைகள் அடைப்பு
இதற்கிடையே மஞ்சுவிரட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.