

அவுரங்காபாத்,
உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துல்ஜா பவானி கோவிலுக்கு சொந்தமாக 1,150 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். அவர் இது குறித்து கூறியதாவது:-
மராட்டிய மாநில மின் உற்பத்தி நிறுவனம் (மகாஜெக்கோ) முன்மொழிந்த 250 மெகாவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி திட்டத்திற்கு கோவில் அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான மலும்புரா கிராமத்தில் உள்ள 617 ஏக்கர் நிலத்திலும், மஸ்லா கிராமத்தில் உள்ள 532 ஏக்கர் நிலத்திலும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 1 யூனிட் மின்சாரத்திற்கு கோவிலுக்கு ரூ.2 செலுத்தப்படும். அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.91 லட்சம் வருவாய் கிடைக்கும். மேலும் திட்ட மதிப்பீட்டில் 1.62 சதவீத பங்கை கோவில் பெற முடியும். இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசகரை கோவில் அறக்கட்டளை நியமித்துள்ளது. இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.