காமன்வெல்த் விளையாட்டு: மல்யுத்தத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியா ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தியது.
image tweeted by @FirstpostSports
image tweeted by @FirstpostSports
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வலுதூக்குதல் போட்டியில் ஹெவிவெயிட் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுதிர் தனது முதலாவது முயற்சியில் 208 கிலோ எடையை தூக்கினார். 2-வது முயற்சியில் 212 கிலோ தூக்கிய அவர் 3-வது மற்றும் கடைசி வாய்ப்பில் 217 கிலோ எடையை தூக்க முயற்சித்து தோல்வி அடைந்தார். முடிவில் சுதிர் 134.5 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

அரியானாவை சேர்ந்த 28 வயதான சுதிர் தனது 4 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இருப்பினும் மனம் தளராமல் தனக்கு பிடித்தமான வலுதூக்குதலில் 2013-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த அவர் 2018-ம் ஆண்டு நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

'தங்கமகன்' சுதிருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், 'காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பாரா வலுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்திய சுதிருக்கு எனது வாழ்த்துகள். உங்களது உத்வேகமான செயல் திறன் மற்றும் அர்ப்பணிப்பு இந்தியாவுக்கு பதக்கத்தையும், பெருமையையும் கொண்டு வந்து இருக்கிறது. வருங்கால முயற்சிகளிலும் நீங்கள் பிரகாசிக்க வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து பதிவில், 'காமன்வெல்த் போட்டியில் பாரா விளையாட்டில் சுதிர் பதக்க கணக்கை ஆரம்பித்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் மதிப்புமிக்க தங்கப்பதக்கத்தை வென்று தனது அர்ப்பணிப்பையும், உறுதியையும் மீண்டும் நிரூபித்து இருக்கிறார். அவர் களத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது வெற்றிக்கும், எதிர்கால அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீசங்கர் வெள்ளி வென்றார்

தடகள போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இறுதி சுற்றில் 8 வீரர்கள் களம் இறங்கினர். இதில் பகாமஸ் நாட்டு வீரர் லாக்வான் நைரின், இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் ஆகியோர் தலா 8.08 மீட்டர் தூரம் தாண்டி இணைந்து முதலிடத்தில் இருந்தனர். இதையடுத்து தங்கப்பதக்கம் யாருக்கு? என்பதை முடிவு செய்ய விதிமுறைப்படி அவர்கள் இருவரின் அடுத்த சிறப்பான செயல்பாடு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. 2-வது அதிகபட்ச தாண்டுதலாக லாக்வான் நைரின் 7.98 மீட்டரும், ஸ்ரீசங்கர் 7.84 மீட்டரும் தாவியிருந்தனர். இதன் அடிப்படையில் லாக்வான் நைரின் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. தென்ஆப்பிரிக்க வீரர் ஜோவான் வான் வூரென் (8.06 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீரரான முகமது அனீஸ் யாஹியா (7.97 மீட்டர்) 5-வது இடமே பிடித்தார்.

தேசிய சாதனையாளரான கேரளாவை சேர்ந்த 23 வயது ஸ்ரீசங்கர் காமன்வெல்த் விளையாட்டில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை சொந்தமாக்கினார். இதற்கு முன்பு 1978-ம் ஆண்டில் இந்திய வீரர் சுரேஷ் பாபு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

மல்யுத்தத்தில் 3 தங்கம்

நேற்று அரங்கேறிய ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 9-2 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான 28 வயதான பஜ்ரங் பூனியா அரியானாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இதே போல் பெண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 3-7 என்ற கணக்கில் 2 முறை சாம்பியனான ஒடுனயோ போலாசட்விடம் (நைஜீரியா) தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

இதன் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக் ஷி மாலிக் கனடாவின் கோடிநெஸ்சை வீழ்த்தி தங்கமங்கையாக உருவெடுத்தார். 0-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த சாக்ஷி மாலிக்கு அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எதிராளியை சாய்த்தார்.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த மற்றொரு வீரரான தீபக் புனியா இந்தியாவுக்கு 9-வது தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார். ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

அடுத்து நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் மற்றும் மோஹித் கிரேவால் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர்.

முன்னதாக மல்யுத்தம் நடந்த இடத்தில் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பிரச்சினையும், குழப்பமும் நிலவியதால் போட்டிகள் தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதம் ஆனது.

பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலம் என்று மொத்தம் 134 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என்று 26 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com