துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளின்றி பதக்க எண்ணிக்கையில் அசத்திய இந்தியா - காமன்வெல்த் பயணம் ஒரு பார்வை

இந்த முறை ஸ்குவாஷ், லான் பவுல்ஸ், மகளிர் ஆக்கி, டேபிள் டென்னிஸ் என இந்திய அணியின் சாதனை பதக்க பட்டியல் நீளுகிறது.
Image Tweeted By @Media_SAI / @imVkohli
Image Tweeted By @Media_SAI / @imVkohli
Published on

பர்மிங்காம்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி பிரம்மாண்டமான விழாவுடன் தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான நேற்று, இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்றது. இறுதியாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று, இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த முறை இந்திய அணியின் பதக்கங்கள் குறைந்துள்ள போதிலும் இந்தியா இதுவரை பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளில் இதுவே இந்தியாவின் சிறப்பான தொடர் என விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், 101 பதக்கங்களை வென்று இந்தியா 2-வது இடத்தைப் பிடித்தது. அதே போல 2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 66 பதக்கங்களை வென்று இருந்தது.

ஆனால் அதற்கு முக்கிய காரணம் அந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள் இடம் பெற்று இருந்தது தான். குறிப்பாக 2010 ஆம் ஆண்டு 20+ பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் இருந்தும், வில்வித்தையில் 8 பதக்கங்களும் இந்தியாவுக்கு கிடைத்தன.

ஆனால் இந்த முறை துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளின்றி இந்திய அணி மாபெரும் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ஸ்குவாஷ், லான் பவுல்ஸ், மகளிர் மற்றும் ஆடவர் ஆக்கி, டேபிள் டென்னிஸ், பாரா விளையாட்டு போட்டிகள் என இந்திய அணியின் சாதனை பதக்க பட்டியல் நீளுகிறது. அதே போல், 2010 காமன்வெல்த் போட்டியில் இடம் பெறாத கிரிக்கெட், ஜூடோவிலும் இந்திய அணி இம்முறை பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது.

இந்த முறையும் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள் இடம் பெற்று இருந்தால் நிச்சயமாக இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 3 இலக்க எண்ணை எட்டி இருக்கும் என விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக பலரும் அறியாத லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இது போன்ற வெற்றிகள் பலரையும் இது போன்ற பலரும் அறியாத விளையாட்டு போட்டிகளில் ஈடுபட ஊக்கமாக அமையும். கடந்த முறையை விட பதக்க எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்திய வீரர், வீராங்கனைகள் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் பயணத்தில் பல புதிய வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com