

இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின் ஒரு வரப்பிரசாதம்தான் ஆனால் சில துணிகளை வாஷிங் மெஷினில் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். அவை பற்றிய விவரம் பின்வருமாறு;
அதிக அழுக்குள்ள, சேறும் சகதியுமான துணிகள், செல்லப் பிராணிகளுக்கு பயன்படுத்திய முடிகள் நிறைந்த போர்வை போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கக்கூடாது. அவை மெஷினை சேதமாக்கும். துணியும் முறையாக சுத்தப்படுத்தப்படாது. மீறி துவைக்க வேண்டும் என விரும்பினால், செல்லப்பிராணிகளின் முடியை லிண்ட் ரோலர் (Lint Roller) பயன்படுத்தி அகற்றிவிட்டும், மணல் நிறைந்த துணிகளை குப்பைத்தொட்டியில் நன்றாக உதறிவிட்டும் வாஷிங் மெஷினில் துவைக்கலாம்.
வாஷிங் மெஷினின் வேகமான சுழற்சி, கழுத்துக்கு சப்போர்ட் கொடுக்கும் திடமான 'மெமரி போம்' (Solid memory foam) தலையணைகளை கிழித்துவிடக் கூடும் என்பதால் எக்காரணத்தை முன்னிட்டும் வாஷிங் மெஷினில் அவற்றைத் துவைக்கக் கூடாது.
அதிக எடையுள்ள போர்வைகளை மெஷின் வாஷ் செய்யலாம் என்று எழுதியிருந்தாலும் வாஷிங் மெஷினின் கொள்ளளவை யோசித்து, வாஷிங் மெஷினில் அவற்றை துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக திறன் கொண்ட வாஷிங் மெஷின் (சுமார் 10 கிலோ) என்றாலும் அதிக எடை கொண்ட போர்வை, மெஷினில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும்.
'டிரை கிளீன் ஒன்லி' (dry clean only என கேர் லேபிளில் இருக்கும் துணிகளை வாஷிங் மெஷினில் போடும்போது அவை சுருங்கி, நிறம் மங்கி, கிழிந்து போகும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை கைகளிலேயே துவைக்க வேண்டும். பட்டு (Silk), காஷ்மீர் (Cashmere), லெதர் (Leather) மற்றும் எம்பிராய்டரி உள்ள துணிகளையும், சூட் மற்றும் கவுன்களையும் டிரை கிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.
பழைய (Vintage) உடைகளையும், மென்மையான துணிகளான பட்டு, சூட் (Suede), லேஸ் போன்றவற்றையும் மெஷினில் துவைக்காமல், மைல்டான டிடர்ஜென்ட் பயன்படுத்தி குளிர்ந்த நீரில் கைகளால் துவைக்க வேண்டும். மடிப்புள்ள ஸ்கர்ட்கள் (Pleated skirts), லெதர் துணிகள், மணிகள், மினு மினுப்புகள் (Sequins) அல்லது லேஸ் வேலைப்பாடு உள்ள துணிகள் பாழாகாமல் இருக்க டிரை கிளீனிங் முறையே சிறந்தது.
ஜீன்ஸ் பேண்ட், ஜிப்புகள் வைத்த ஜாக்கெட்டுகள் போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும்போது ஜிப்புகள் திறந்திருந்தால் அதன் பற்கள் மற்ற துணிகளை எளிதில் கிழித்துவிடும். எனவே, ஜிப்பை மூடி மெஷினில் துவைக்க வேண்டும். அதேபோல் ஜிப்பை லாக் செய்து மெஷ் லாண்டரி பைகளையும் மெஷினில் துவைக்கலாம்.
பாக்கெட் உள்ள துணிகளை வாஷிங் மெஷினில் போடும்போது அவற்றைச் சரிபார்க்க வேண்டும். இல்லையென்றால் அதில் இருக்கும் நாணயங்கள், சாவிகள் போன்றவை மெஷினின் உட்புறத்தைச் சேதப்படுத்திவிடும். மேலும் டிஷ்யூ பேப்பர், பழைய ரசீதுகள், லிப் பாம்கள் போன்றவை இருந்தால் அவை கரைந்து மற்ற துணிகளில் பரவி பாழாக்கிவிடக் கூடும்.
மெஷினின் அதிக சுழற்சி. அதிக வெப்பத்தின் காரணமாக லெதர் ஆடைகள் சுருங்கி வெடிப்பு ஏற்பட்டு அளவு மாறிவிடும். ஆகவே தோல் ஆடைகளான லெதர் ஜாக்கெட்டுகள், பேன்டுகளை வாஷிங் மெஷினில் துவைக்காமல், கறையுள்ள இடத்தில் கையால் சுத்தம் செய்யுங்கள்.
அடர் நிறங்களான சிவப்பு, ஆரஞ்சு நிறத் துணிகள் சாயம் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றை மிஷினில் துவைக்கக் கூடாது. மீறி துவைத்தால். சாயம் போகும் துணிகளில் இருந்து வெளியேறும் வண்ணங்கள் மற்ற துணிகளில் கலந்து அவற்றின் நிறத்தை மாற்றிவிடும்.