கூடுதல் எரிபொருள் கட்டணம்: ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா விமான டிக்கெட் விலை உயர்வு

கட்டண உயர்வு புதிய முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் எரிபொருள் கட்டணம்: ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா விமான டிக்கெட் விலை உயர்வு
Published on

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதோடு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. கத்தார், ஈராக்கின் குர்திஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் விமானங்களின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 14-ந்தேதி(இன்று) முதல் இண்டிகோ விமான நிறுவனம் எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தை வசூலிக்க தொடங்கியுள்ளது. ஜெட் எரிபொருள் விலை 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான பயணங்களுக்கு சுமார் ரூ.900 (Dh36) வரை கட்டணம் அதிகரிக்கும் எனவும், இந்த கட்டணம் புதிய முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com