பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ‘வாக்கு என்னும் ஆயுதத்தால் 18-ந் தேதி பதிலடி கொடுப்போம்’ ராம கோபாலன் அறிக்கை

பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு வாக்கு என்னும் ஆயுதத்தால் 18-ந் தேதி பதிலடி கொடுப்போம் என்று ராம கோபாலன் தெரிவித்து உள்ளார்.
பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ‘வாக்கு என்னும் ஆயுதத்தால் 18-ந் தேதி பதிலடி கொடுப்போம்’ ராம கோபாலன் அறிக்கை
Published on

சென்னை,

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி (நாளை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சியில் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளை காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்து உள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதில் இருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பயன்படுத்தி, அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று அய்யப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.

மேலும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள். வருகின்ற 18-ந் தேதி அய்யப்பனின் பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு என்னும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com