பெண்ணாகவே பிறந்தேன்.. பெண்ணாகவே வளர்ந்தேன் - தங்கப்பதக்கம் வென்ற இமானே கெலிப்

அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிப் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் சீனாவைச் சேர்ந்த யாங் லியூவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிப் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற முதல் அல்ஜீரிய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

முன்னதாக 2-வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானே கெலிப்பின் குத்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 வினாடிகளில் அழுதபடி போட்டியில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கடந்த ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது. அதனை பயன்படுத்தி அவர் வரலாறு படைத்துள்ளார்.

இந்த வெற்றிக்கு பின் இமானே கெலிப் அளித்த பேட்டியில், "கடந்த 8 ஆண்டுகளாக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வது மட்டுமே எனது கனவாக இருந்தது. இப்போது நானும் ஒலிம்பிக் சாம்பியன். தங்கப்பதக்கம் வென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஆதரவாக இருந்த பாரீசில் உள்ள அனைத்து அல்ஜீரியா மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றியை அல்ஜீரியா மக்களுக்கும், என் குழுவினருக்கும் அர்ப்பணிக்கிறேன். எனது வெற்றியால் அல்ஜீரியாவில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே விளையாட்டு வீரர்களாக திறமையை வெளிப்படுத்துவதற்குதான். மீண்டும் இதுபோன்ற தாக்குதல்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும்.

இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க நான் முறையாக தகுதி பெற்றுள்ளேன். மற்ற பெண்களை போல் நானும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணாகவே பிறந்தேன். பெண்ணாகவே வளர்ந்தேன். பெண்ணாகத்தான் பதக்கம் வென்றுள்ளேன். என்னை எதிரியாக நினைக்கும் சிலரால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இந்த வெற்றிக்காக 8 ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளேன். 8 ஆண்டுகளாக தூக்கம் இழந்து பயிற்சி செய்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com