'இந்தியா' கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறையிலும், மீதிப்பேர் ஜாமீனிலும் உள்ளனர் - ஜே.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையின்கீழ் நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் தொகுதியில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், "'இந்தியா' கூட்டணி என்பது ஊழல் பாதுகாப்பு கூட்டணி ஆகும். அதில் உள்ள கட்சிகளில் தலைவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். பொதுச்செயலாளரும் அதே குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். மந்திரிகளும் அதே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இத்தகைய கட்சிகளைத்தான் குடும்ப கட்சிகள் என்று சொல்கிறோம்.

காங்கிரஸ் கட்சி எங்கு பார்த்தாலும் ஊழல் செய்துள்ளது. ராகுல்காந்தி, ஜாமீனில் இருக்கிறாரா? இ்ல்லையா?

சோனியாகாந்தி, ப.சிதம்பரம், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் ஆகியோரும் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். ஆகவே, 'இந்தியா' கூட்டணி தலைவர்களில் பாதிப்பேர் ஜெயிலிலும், மீதிப்பேர் பெயிலிலும் (ஜாமீன்) இருக்கிறார்கள்.

ஆனால், இந்திய மக்கள் ஊழலற்ற அரசை விரும்புகிறார்கள். வளர்ச்சிசார்ந்த அரசை விரும்புகிறார்கள். பிரதமர் மோடி தலைமையின்கீழ் நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியுடன் வளர்ந்த நாடாக இந்தியா முன்னேற வேண்டும்.

பிரதமர் மோடி ஆட்சியில் கிராமங்கள் முன்னேறி உள்ளன. மோடி ஆட்சிக்கு வந்தபோது, 18 ஆயிரம் கிராமங்களில் மின்இணைப்பு இல்லை. அந்த கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் சாலைவசதி போடப்பட்டது. 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதனால், 25 கோடி மக்கள், வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம்பேருக்கு, அதாவது 55 கோடி பேருக்கு 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது" என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com