நாடாளுமன்ற தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் கனிமொழி

தூத்துக்குடி தொகுதி தி.மு.க.வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளராக தற்போதைய எம்.பி கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கனிமொழி எம்.பி. வந்தார். அங்கு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கோ.லட்சுமிபதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கனிமொழி சார்பில் 2 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கனிமொழிக்கு மாற்று வேட்பாளராக தி.மு.க விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் ரா.வேலுச்சாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தி.மு.க வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், நகைகள், கார்கள் என மொத்தம் ரூ.38 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள் என ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆக மொத்தம் ரூ.57 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்து 177 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் தனது கணவர் கோ.அரவிந்தன் பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆக மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.மேலும், தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் எந்த கடனும் இல்லை எனவும் கனிமொழி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com