கடும் போட்டிக்கு இடையே திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சசிதரூர் வெற்றிமுகம்

கடும் நெருக்கடி கொடுத்த பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை விட சசிதரூர் 15,879 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் எப்போதுமே காங்கிரசின் கோட்டையாகவே இருந்துள்ளது. அவ்வப்போது அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வந்து போயிருக்கின்றன. ஆனால், கடந்த 3 மக்களவைத் தேர்தல்களிலும் திருவனந்தபுரம் தெகுதியில் காங்கிரசை அசைக்க முடியவில்லை. காரணம், சசிதரூர் என்ற ஒற்றை மனிதர் தான்.

சிறப்பான நிர்வாகம், தெகுதி பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு, தீர்க்க முடியாத பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பது என ஒரு சிறந்த எம்.பி.யாக செயல்பட்டு வந்தார் சசிதரூர். அதனால் கடந்த 3 முறையும் அவரை திருவனந்தபுரம் மக்கள் கைவிடவில்லை.

இந்தசூழலில் இந்த தேர்தலில் சசிதரூரை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் கம்யூனிஸ்ட்டும், பா.ஜனதாவும் தங்கள் வேட்பாளர்களை அங்கு களமிறக்கினர். அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக பன்யன் ரவீந்திரனும், பா.ஜனதா சார்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் களமிறக்கப்பட்டனர். ராஜீவ் சந்திரசேகருக்கு திருவனந்தபுரத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதால், இது சசிதரூருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

எதிர்பார்த்தபடியே, இன்று காலை முதலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பா.ஜனதாவின் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரசின் சசிதரூருக்கு பயங்கர நெருக்கடி கெடுத்து வந்தார். இதனால் திருவனந்தபுரத்தில் பா.ஜனதா ஜெயித்து வரலாறு படைக்கும் என்ற நிலைமை உருவானது. ஆனால், அதற்கு பிறகு மதியம் 1 மணிக்கு மேலே சசிதரூர் முன்னிலை பெறத் தெடங்கினார்.

இந்நிலையில் கடும் போட்டிக்கு இடையே திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 4-வது முறையாக காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றிவாகை சூட உள்ளார். தற்போது அவர் 3,53,518 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்படி கடும் நெருக்கடி கொடுத்த பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை விட 15,879 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இதனால் கிட்டத்தட்ட அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com