தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் 'சிந்தித்து புரிந்து கொண்டு முடிவு எடுங்கள்' - நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

நாடு முக்கியமான தருணத்தில் இருப்பதாகவும், மக்கள் சிந்தித்து புரிந்து கொண்டு முடிவு எடுக்குமாறும் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி மறுபுறம் என பிரதான கூட்டணிகளுடன், பல்வேறு மாநில கட்சிகள் தனித்தனியாகவும் மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.

தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரமும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யுமாறு அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளம் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அதில் அவர், "இந்தியா தற்போது மிகவும் முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நாட்டை கட்டி எழுப்பியவர்கள் யார்? சீரழித்தவர்கள் யார்? என்பதை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், ஒவ்வொரு ஏழைப் பெண்ணும் கோடீசுவரர், தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.400, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு, அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற உத்தரவாதங்களை காங்கிரசும், இந்தியா கூட்டணியும் வழங்கி உள்ளன.

அதேநேரம் பா.ஜனதாவோ, வேலையில்லா திண்டாட்டம் உறுதி, விவசாயிகளுக்கு கடன் சுமை, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அற்ற பெண்கள், உதவியற்ற தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் பாகுபாடு மற்றும் சுரண்டல், சர்வாதிகாரம், போலி ஜனநாயகம் போன்றவற்றைத்தான் அர்த்தப்படுத்துகிறது.

நாட்டின் குடிமக்களாகிய உங்களது எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து புரிந்து கொண்டு பிறகு சரியான முடிவை எடுங்கள்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com