”13 மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடி..”: மேட்டூர் அணையின் வரலாறும், பாசன முறைகளும்...

13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.
”13 மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடி..”: மேட்டூர் அணையின் வரலாறும், பாசன முறைகளும்...
Published on

மேட்டூர் அணை

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான அணையாகும். இது தமிழகத்தின் மிகப் பெரிய அணை என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் டபிள்யூ. எம். எல்லீஸ் என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாண மக்களின் வரிப்பணத்திலிருந்து சுமார் ரூ. 4.5 கோடி செலவில், நவீன இயந்திரங்கள் மற்றும் சிமெண்ட்-சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தி இது கட்டப்பட்டது. அணை கட்டுவதற்காக அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்த நாயம்பாடி மற்றும் சில கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.

1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 9 ஆண்டுகள் உழைப்பிற்குப் பின் 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர் ஜார்ஜ் ஸ்டான்லி அணையைத் திறந்து வைத்தார். இதன் அதிகபட்ச நீர்மட்ட உயரம் 120 அடிகள் ஆகும். முழுச் சேமிப்பு கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்போது, சேலம் மாவட்டத்தின் 16 கண் மதகுகள் (Ellis Saddle) வழியாக உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படும். அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலம் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிரம்பிய ஆண்டுகள்:

* மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டிலேயே (அக்டோபர் 27) முதன்முதலாக 120 அடியை எட்டி நிரம்பியது.

* 2025 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சாதனையாக அதிக முறை நிரம்பியது. அதாவது, கடந்த வருடம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், ஒரே ஆண்டில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வந்த உபரிநீராலும் ஒரே ஆண்டில் 7 முறை அணை நிரம்பியது. (ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25, ஆகஸ்ட் 20, செப்டம்பர் 2, அக்டோபர் 21).

* இதுவரையில் அணை மொத்தமாக 44 முறை 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அணை நிரம்பாத ஆண்டுகள்:

மேட்டூர் அணை வரலாற்றில், போதிய மழையின்மை மற்றும் கர்நாடகாவில் இருந்து போதிய தண்ணீர் திறந்து விடப்படாத காரணத்தால் பல ஆண்டுகள் முழு கொள்ளளவை எட்டாமல் நிரம்பாமலேயே இருந்துள்ளன.

1951 ஆம் ஆண்டு (வரலாற்றுச் சோகம்): மேட்டூர் அணை வரலாற்றிலேயே மிக மோசமான ஆண்டாக 1951 கருதப்படுகிறது. அந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் வெறும் 14.86 அடிகளாகக் குறைந்தது. அணையின் வரலாற்றில் பதிவான மிகக் குறைந்தபட்ச நீர்மட்டம் இதுவேயாகும்.

1968 ஆம் ஆண்டு: கடும் வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் 24.05 அடிகள் வரை சரிந்தது.

2004 ஆம் ஆண்டு: டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவிய இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் 29.70 அடிகள் வரை மட்டுமே சரிந்தது.

2017 ஆம் ஆண்டு: தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் 20 அடிகள் வரை சரிந்து, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

தொடர்ச்சியாக அணை நிரம்பாத காலக்கட்டங்கள்;

* மேட்டூர் அணை வரலாற்றில் சில சமயம் தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை கூட ஒருமுறை கூட 120 அடியை எட்டாமல் இருந்துள்ளது. 1947 முதல் 1952 வரை: தொடர்ந்து 5 ஆண்டுகள் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.

* 1982 முதல் 1990 வரை: இந்த 8 ஆண்டு கால இடைவெளியில், 1984 மற்றும் 1988 ஆகிய இரு ஆண்டுகளைத் தவிர மற்ற 6 ஆண்டுகள் அணை நிரம்பவே இல்லை.

* 2001 முதல் 2004 வரை: டெல்டா விவசாயத்தைப் பாதித்த மிக மோசமான வறட்சி காலம். இந்த 4 ஆண்டுகளும் அணை 120 அடியைத் தொடவில்லை.

* 2014 முதல் 2017 வரை: தொடர்ந்து 4 ஆண்டுகள் கர்நாடக காவிரியின் நீர்மப் பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்ததால் அணை நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது.

அணையின் உள்ளே வரலாற்றுச் சின்னங்கள்:

அணை நிரம்பாமல் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே குறையும் காலங்களில், அணை கட்டுவதற்காக நீரில் மூழ்கடிக்கப்பட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை மற்றும் நாயம்பாடி தேவாலயத்தின் கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிந்து சுற்றுலாத் தலமாக மாறிவிடுவது வழக்கம்.

தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்படும். அதன்பிறகு, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

எப்போதும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம்.

பயிர் சாகுபடி

"பருவத்தே பயிர் செய்" என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். அதாவது, 'சரியான பருவத்தில் விதைத்தால்தான் குறிப்பிட்ட காலத்தில் விளைச்சல் தரும்' என்பதே அதன் பொருள். அந்த வகையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இந்த அணையின் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

குறுவை சாகுபடிக்கு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி. தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30 ஆயிரத்து 800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 7.51 டி.எம்.சி. தண்ணீரும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும்.

அணையின் தற்போதைய நிலை

கர்நாடகாவில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால், அங்குள்ள அணைகள் நிரம்பவில்லை. இதனால் அங்கிருந்து காவிரி ஆறு மூலமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரவில்லை. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இதுவரை கை கொடுக்காத நிலையில், மேட்டூர் அணை குட்டை போல வறண்டு காணப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இனி, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். குறுவை பொய்த்தாலும், சம்பா, தாளடி சாகுபடிக்கு நீர் திறந்துவிட வாய்ப்பாக அமையும். 13 மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடி மேட்டூர் அணை என்றால் அது மிகையாகாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com