தடகளத்தில் சாதனை படைத்த லட்சுமணன்-சூர்யா திருமணம்

தடகளத்தில் சாதனை படைத்த லட்சுமணன்-சூர்யா திருமணம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு மேலவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.லட்சுமணன் (வயது 29 ). ஓட்டப்பந்தய வீரரான இவர் 2017-ம் ஆண்டு ஒடிசாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ராணுவத்தில் பணியாற்றும் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

புதுக்கோட்டை வசந்தபுரிநகரை சேர்ந்த தடகள வீராங்கனை சூர்யா (29). இவர் கவுகாத்தியில் 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். சூர்யா, திருச்சியில் ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை லோகநாதன், லட்சுமணனுக்கு ஆரம்ப கால பயிற்சியாளர் ஆவார்.

இவர்கள் இருவரும் பயிற்சி முகாம் மற்றும் பல்வேறு போட்டிகளில் இணைந்து பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் லட்சுமணன்-சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் பெற்றோரும் பேசி முடிவு செய்தனர்.

அதன்படி இவர்களது திருமணம் நேற்று புதுக்கோட்டையில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலில் நடந்தது. தம்பதியை தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com