ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

image courtesy:twitter/@BCCI
ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் (796 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2 அரைசதம், ஒரு சதம் என்று 259 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார். இவர் நம்பர் 1 இடத்தை அலங்கரிப்பது இது 2-வது முறையாகும். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் (773 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு சரிந்தார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா (761 புள்ளிகள்3-வது இடத்திலும், விராட் கோலி (727 புள்ளிகள்) 6-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார். டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






