'உலக சாம்பியனை வீழ்த்தியது மறக்க முடியாத தருணம்' - நெகிழ்ந்த அயர்லாந்து கேப்டன்

அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
'உலக சாம்பியனை வீழ்த்தியது மறக்க முடியாத தருணம்' - நெகிழ்ந்த அயர்லாந்து கேப்டன்
Published on

பெல்பாஸ்ட்,

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பிறகு, அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கன் டக்கர், தனது அணியை பாராட்டியுள்ளார்.

இந்தியா தோல்வி

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் பெல்பாஸ்ட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

பின்னர் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கம் கொடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

'வீரர்களுக்கே முழு பெருமை'

வெற்றிக்கு பிறகு பேசிய அயர்லாந்து கேப்டன் லோர்கன் டக்கர், இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் தனது அணியின் வீரர்களுக்கே சேரும் என்று கூறினார்.

அவர் கூறியதாவது:

"உலக சாம்பியன்களை எங்கள் சொந்த மண்ணில், இந்த சீசனின் முதல் போட்டியிலேயே வீழ்த்தியது மிகவும் சிறப்பான தருணம். இந்த வெற்றிக்கான முழு பெருமையும் எங்கள் வீரர்களுக்கே சேரும். இது எப்படி சாத்தியமானது என்று எனக்கே தெரியவில்லை. அடுத்த போட்டியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் கேப்டனாக எனக்கு இது மிகச் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com