

புதுடெல்லி,
2027-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமியை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவில் தற்போது போதுமான வீரர்கள் இருப்பதாகக் கூறிய தினேஷ் கார்த்திக், ஷமியை மீண்டும் அணிக்கு அழைப்பதில் பயனில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அணியில் வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஷமியைத் தாண்டி இந்திய அணி நகர்ந்துவிட்டது. அவர் சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும், மீண்டும் அவரை அணியில் சேர்ப்பது குறித்து நான் யோசிக்க மாட்டேன்” என்றார்.
இதற்கிடையே, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 2027 உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா என கார்த்திக்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ஆம். இருவரும் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்கள். உலக கிரிக்கெட்டின் மையமாக இந்தியா இருக்கும் நிலையில், சிறந்த வீரர்களில் இருவர் அணியில் இருந்து விலகினால், அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.