

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 9 ரன்களில் சேவியர் பார்ட்லெட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், டாம் பான்டனுடன் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். டாம் பான்டன் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டார். அவர் 86 பந்துகளில் சதம் அடித்து அசத்தியதுடன், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 121 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார்
இங்கிலாந்து அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறியபோது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மீண்டும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக, ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆட்டத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. ஹாரி புரூக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருப்பினும் ஜோர்டான் காக்ஸ் மற்றும் வில் ஜாக்ஸ் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜோர்டான் காக்ஸ் 67 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் அரைசதமடித்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் எடுத்தது.