ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் வென்றது

இந்திய அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் வென்றது
Published on

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய தரப்பில் நிதிஷ்குமார் ரெட்டி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், பும்ரா, அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஒரு கட்டத்தில் 67 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு பங்களிப்பை அளித்து ஸ்கோர் 150-ஐ கடக்க வைத்தனர். டார்விஷ் ரசூலி 28 ரன்களும், முகமது நபி 20 ரன்களும், ரஷித்கான் 28 ரன்களும் (16 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (11 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய தரப்பில் நிதிஷ்குமார் ரெட்டி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், பும்ரா, அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சாம்சன் அரைசதம்

பின்னர் 160 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்டனர். பவர்-பிளேக்குள் (முதல் 6 ஓவர்) 82 ரன்கள் திரட்டி வெற்றிப்பாதையை எளிதாக்கினர்.அணியின் ஸ்கோர் 88-ஐ எட்டிய போது அபிஷேக் ஷர்மா 39 ரன்களில் (19 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து பவுண்டரி, சிக்சருடன் தனது 7-வது அரைசதத்தை பூர்த்தி செய்த சஞ்சு சாம்சனும் (57 ரன், 22 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அதே ஓவரில் எல்லைக்கோடு அருகே சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்னில் வெளியேறினார்.

இந்தியா வெற்றி

இந்திய அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்த இஷான் கிஷன் 38 ரன்களுடனும் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நிதிஷ்குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த வெற்றியால் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com