

மான்செஸ்டர்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா (43), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (37), இஷான் கிஷன் (49) ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். எனினும், அணியின் கேப்டன் புரூக் (39), டாம் பேன்டன் (39) ரன்கள் எடுத்தனர். ஜேக்கப் பெத்தல் (76) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அதிக அளவாக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.