

கிங்ஸ்டன்,
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு கமில் மிஷாரா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு தசுன் ஷனகா சிறப்பான ஒத்துழைப்பு அளித்து அவரும் அரைசதம் பதிவு செய்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிராண்டன் கிங் (2), ஷாய் ஹோப் (6) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். எனினும், ஷிம்ரோன் ஹெட்மையர் - ரோவ்மன் பவல் ஜோடி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அப்போது ஹெட்மையர் 36 ரன்களும், ரோவ்மன் பவல் 43 ரன்களும் விளாசி விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து இலங்கை பந்துவீச்சாளர்கள் இடைவிடாமல் விக்கெட்டுகளை கைப்பற்றியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கனக்கில் சமனில் உள்ளது.