

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது.
இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனை கெலிஸ் ந்த்லோவு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை பெலவ்ட் பிசா 7 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம், சிபோ முகேரி-திரிபானோ சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஜோசபின் நகோமோ 35 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினர்.
இந்திய அணி தரப்பில் நந்தனி சர்மா, தீப்தி சர்மா, நிகி பிரசாத் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில், ஜிம்பாப்வே மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.