

செயின்ட் லூசியா,
தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 298 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 149 ரன்னில் சுருண்டது. அடுத்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 53 ஓவர்களில் 174 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக வான்டெர் துஸ்சென் 75 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச் 4 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனை அடுத்து 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி மதிய உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, இறுதியில் அந்த அணி 58.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கரண் பவெல் 51 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 5 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 158 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.