

லண்டன்,
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி2, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 322 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து தரப்பில் தொடக்க வீரர் டாம் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்தார். இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.