39 பந்துகள்... 12 சிக்சர்கள்... ரசல் சாதனையை முறியடித்த தசுன் ஷனகா

சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
தசுன் ஷனகா
Published on

செயின்ட் கிட்ஸ் ,

39 பந்துகளில் சதம் விளாசி ரசல் சாதனையை தசுன் ஷனகா முறியடித்துள்ளார்.

சி.பி.எல்

7 அணிகள் இடையிலான கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் - செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.

235 ரன்கள்

டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் தசுன் ஷனகா அதிரடியாக ஆடி சி.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவர் வெறும் 39 பந்துகளில் சதத்தை எட்டியதுடன், 43 பந்துகளில் 8 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 121 ரன்கள் விளாசினார்.

குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 4 ஓவர்களில் மட்டும் 9 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

அதிவேக சதம்

இந்த சதத்தின் மூலம் சி.பி.எல். வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை தசுன் ஷனகா தன்வசப்படுத்தினார்.

இதற்கு முன்பு ஆண்ட்ரே ரசல், டிம் செய்பெர்ட், ஹெட்மயர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் அடித்ததே சி.பி.எல். வரலாற்றில் அதிவேக சதமாக இருந்தது. தற்போது 39 பந்துகளில் சதம் அடித்து அந்த சாதனையை ஷனகா முறியடித்துள்ளார்.

அபார வெற்றி

இதையடுத்து 236 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, செயின்ட் கிட்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com