3-வது ஒரு நாள் போட்டி: இலங்கைக்கு 430 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 429 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து
Published on: 

ராவல்பிண்டி

இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில், 430 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தானில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று விளையாடின. ராவல்பிண்டியில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து பேட்டிங்

இதன்படி, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில், தொடக்க வீரர் டாம் பேன்டன் அரை சதம் (50) விளாசினார். பென் டக்கெட் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, வெல்லாலகே பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.

எனினும், ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதில் ரூட், 8 பவுண்டரிகள் விளாசி 69 ரன்கள் எடுத்திருந்தபோது, அசித பெர்னாண்டோ பந்து வீச்சில் வெல்லாலகேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இரட்டை சதம்

தொடர்ந்து புரூக்குடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி, 30 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். அந்த அணியின் கேப்டனான ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி, இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய அவர், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

430 ரன்கள் இலக்கு

எனினும், ஆட்டத்தின் கடைசி பந்தில் 202 ரன்கள் (116 பந்துகள், 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) எடுத்திருந்தபோது, ஜனித் பந்து வீச்சில் சஹான் அராச்சிகேவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனால், 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 429 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு 430 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. எனினும், 4 ஓவர்கள் முடிவிலேயே அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 23 ரன்களுடன் திணறி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com