3வது ஒருநாள் போட்டி: இந்தியா 'ஏ' அணி வெற்றி

சூர்யான்ஷ் ஷெட்ஜேவின் பொறுப்பான ஆட்டம் அணியை 275 ரன்கள் வரை கொண்டு சென்றது.
3வது ஒருநாள் போட்டி: இந்தியா 'ஏ' அணி வெற்றி
Published on: 

புதுச்சேரி,

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணியின் பேட்டிங்கில் சூர்யான்ஷ் ஷெட்ஜே முக்கியப் பங்காற்றினார். அவர் 60 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 45 பந்துகளில் 49 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர்.

இருப்பினும், தேவ்தத் படிக்கல் 2 ரன்களிலும், ரஜத் பட்டிதார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்தியா ஏ அணியின் பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்ட முடியாத சூழலில், சூர்யான்ஷ் ஷெட்ஜேவின் பொறுப்பான ஆட்டம் அணியை 275 ரன்கள் வரை கொண்டு சென்றது.

276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு ஜோஷ் பிலிப் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். நாதன் மெக்ஸ்வீனி 58 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர். இந்தியா ஏ அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்தனர்.

இந்தியாவின் பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங் 56 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 46.2 ஓவர்களில் 226 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா ஏ அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றாலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ஏ அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பேட்டிங்கில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், கடைசிப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டது இந்தியா ஏ அணிக்கு நேர்மறையான அம்சமாக அமைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com