3வது டி20 போட்டி; ரூதர்போர்டு - ரசல் அதிரடி - வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரூதர்போர்டு மற்றும் ரசல் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

பெர்த்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அந்த இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் சார்லஸ் 4 ரன்னிலும், மேயர்ஸ் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பூரன் 1 ரன், ரோஸ்டன் சேஸ் 37 ரன், பவல் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரூதர்போர்டு மற்றும் ரசல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரசல் 29 பந்தில் 71 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரொமேரியா ஷெப்பர்ட் களம் இறங்கினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல் 71 ரன் மற்றும் ரூதர்போர்டு 67 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com