வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

பர்மிங்காம்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தடுமாறியது. 2-வது நாளான நேற்று தொடங்கிய சிறிது நேரத்தில் ஆலி போப் (10 ரன்), ஹாரி புரூக் (2 ரன்) ஆகியோரும் வெளியேறினர். அப்போது 5 விக்கெட்டுக்கு 54 ரன்களுடன் இங்கிலாந்து தள்ளாடியது.

என்றாலும் பின்வரிசை வீரர்கள் இங்கிலாந்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். ஜோ ரூட் (87 ரன்), கேப்டன் ஸ்டோக்ஸ் (54 ரன்), ஜாமி சுமித் (95 ரன்), கிறிஸ் வோக்ஸ் (62 ரன்) ஆகியோரது அரைசதத்தால் இங்கிலாந்து அணி நிமிர்ந்தது. 75.4 ஓவர்களில் இங்கிலாந்து 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி, 94 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 94 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் அடித்துள்ளது. அலிக் அத்தானஸ் 5 ரன்களுடனும், மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com