

மும்பை,
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டது கவனம் ஈர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணியில் 15 வயதான வைபவ் சூர்யவன்சி சேர்க்கப்பட்டது வரவேற்பைப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மிக இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அதே நேரத்தில், பல முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெறாதது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ரஜத் படிதார் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் ஆர்சிபி அணியை வெற்றிகரமாக வழிநடத்திய படிதார், ஐபிஎல் பட்டத்தை தக்கவைக்க முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோருக்கு பிறகு தொடர்ந்து ஐபிஎல் கோப்பைகளை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார்.
கேப்டன்சியில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் படிதார் சிறப்பாக செயல்பட்டார். 2026 ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் 501 ரன்கள் குவித்த அவர், 192.69 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டை பதிவு செய்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஹர்பஜன் சிங்,
"இந்திய அணியில் ரஜத் படிதார் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்? 501 ரன்கள், கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட். இது அநீதி. இந்தியாவின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவர்தான். நல்ல நுட்பத்துடன் அதிரடியாக விளையாடும் வீரர்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்வுக்குழு இங்கிலாந்து, அயர்லாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மூன்று தனித்தனி அணிகளை அறிவித்துள்ளது. ஆனால் அந்த மூன்று அணிகளிலும் ரஜத் படிதாருக்கு இடம் வழங்கப்படாதது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.