

லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறார். 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் 59 ரன்கள் எடுத்தபோது, டெஸ்டில் மொத்தம் 7,993 ரன்களை கடந்து, புதிய சாதனையை ஏற்படுத்தினார்.
150 இன்னிங்ஸ்களில், அதிக ரன்களை எடுத்து, குமார சங்கக்கரா (7,913), சச்சின் தெண்டுல்கர் (7,869), வீரேந்திர சேவாக் (7,694) மற்றும் ராகுல் டிராவிட் (7,680) ஆகியோரை பின்னுக்கு தள்ளினார்.
இந்த நிலையில், இன்று நடந்த போட்டியில் ஹசன் அலி வீசிய பந்தினை பவுண்டரிக்கு விளாசி ஸ்மித் மற்றொரு புதிய சாதனையை படைத்திருக்கிறார். 151 இன்னிங்சில் (85 டெஸ்ட் போட்டிகள்) விளையாடி அவர் மொத்தம் 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
ஸ்மித் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகள் - 85, இன்னிங்ஸ் - 151, ரன்கள் - 8002 (நாட் அவுட்), சராசரி - 60.17, 200 - 3, சதம் - 27, அரை சதம் - 36 எடுத்து இருக்கிறார்.
இதனால், 12 ஆண்டு கால சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை எடுத்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த வரிசையில் சங்கக்கரா 2வது இடத்திற்கு (152 இன்னிங்ஸ்) தள்ளப்பட்டு உள்ளார். 3வது இடத்தில் சச்சின் (154 இன்னிங்ஸ்), 4வது இடத்தில் கேரி சோபர்ஸ் (157 இன்னிங்ஸ்) மற்றும் 5வது இடத்தில் மற்றொரு இந்திய வீரர் ராகுல் டிராவிட் (158 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.