பந்துவீச்சில் ஜொலித்த அமீர் ஜமால்..! முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

சிறப்பாக பந்துவீசிய அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Image Tweet: Pakistan Cricket
Image Tweet: Pakistan Cricket
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 88 ரன்களும் , அமீர் ஜமால் 82 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 6 ரன்களுடனும் , உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர் , கவாஜா இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருந்த போது டேவிட் வார்னர் 34 ரன்கள் எடுத்து ஆகா சல்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைதொடர்ந்து கவாஜா 47 ரன்களில் அமீர் ஜமால் பந்துவீச்சில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்கவில்லை.

இந்த நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. மார்னஸ் லபுசேன் , ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 187 ரன்னாக இருந்தபோது ஸ்மித் 38 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுசேன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த மார்ஷ் 54 ரன்களிலும் , அலெக்ஸ் கேரி 38 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 109.4 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com