

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்திய முத்தரப்பு டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, அந்த அணியின் தற்போதைய நிலை குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்திறன் பிரிவு தலைவர் ரிச்சர்ட் பைபஸ் (Richard Pybus) நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி இந்த முத்தரப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. லீக் சுற்றில் ஜிம்பாப்வே அணியை 158 ரன்கள் வித்தியாசத்திலும், வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இறுதிப்போட்டியிலும் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அணியின் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதுடன், சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கான நல்ல நிலையில் இருக்கின்றனர்.
அயர்லாந்து தொடரிலும் ஆப்கானிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டது. பொறுப்புகளை உணர்ந்து விளையாடுவது அணியின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. மேலும், உலகின் பல்வேறு ஆடுகளச் சூழல்களிலும் வெற்றிகரமாக விளையாடக்கூடிய அணியை உருவாக்குவதே தங்களது இலக்கு. உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராகத் தொடர்ந்து விளையாட அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.