

சார்ஜா,
கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. சார்ஜாவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 14.3 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ரியான் பர்ல் அதிகபட்சமாக 30 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது 3.3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 8.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.