

சார்ஜா,
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் இத்தொடரில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் சார்ஜாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 339 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரண்டன் டெய்லர் அதிகபட்சமாக 119 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அப்சர் சசாய் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் வின்சண்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 122 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு 418 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், 418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் நேற்றைய 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அப்சர் சசாய், இக்ரம் அலிகிம் தலா 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆட்டத்தில் இன்று ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 275 ரன்கள் பெற வேண்டும். அதேவேளை, ஜிம்பாப்வே வெற்றிபெற இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.