

ஹாங்காங்,
ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
6 வீரர்கள் கொண்ட அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மோங் கோக்கில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. அந்த அணியில் மேக்ஸ் பிரையன்ட் 14 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். அலெக்ஸ் ராஸ் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 116 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தன. கரீம் ஜனத் 13 ரன்களிலும், கேப்டன் குல்பதின் நைப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், இம்ரான் மிர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பினார். அவர் வெறும் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் குவித்தார். பர்மானுல்லா சபி 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.